படம்: ETv Bharat TA
கடந்த ஜனவரி மாதம் 21-ம் தேதி, மாலை 3.30 மணியளவில் பள்ளிக்கரணை காவல் நிலைய சரகம், 200 அடி சாலை அருகிலுள்ள குப்பைக் கிடங்கினுள், பத்தாவது மண்டலமான வள்ளூவர் கோட்டத்தில் இருந்து எடுத்து வந்துக் கொட்டப்பட்ட குப்பையில், நெகிழியால் (பிளாஸ்டிக்) சுற்றபட்டு கிடந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் இரண்டு கால்கள், ஒரு கை துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அங்கு வேலை செய்யும் நபர்கள் கொடுத்த தகவலின் பேரில் பள்ளிக்கரணை காவல் துறையினர் சம்பவ இடம் சென்று வெட்டப்பட்ட கை மற்றும் கால்களை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பள்ளிக்கரணை கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து பள்ளிக்கரணை காவல் துறை விசாரணை நடத்தியது. கைப்பற்றப்பட்ட உறுப்புகள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஒரு கை மற்றும் இரண்டு கால்களை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்து மூன்று மருத்துவ உதவிப் பேராசிரியர்கள் கொண்ட குழு தலைமையில் மரபணு சோதனைக்கு திசுக்களை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியிருந்தனர்.
உடல் உறுப்புகள் எந்த ஆயுதம் பயன்படுத்தி வெட்டி இருப்பார்கள் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் இயந்திரம் மூலமாக வெட்டபட்டிருக்கலாம் என தெரியவந்தது. அன்று தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறைக்கு துப்பு கிடைக்காமல் திணறி வந்தனர். இதனையடுத்து காவல் துறை விசாரணையை முடுக்கிவிட்டது.
இந்நிலையில், பள்ளிக்கரணை குப்பையில் இருந்து எடுக்கப்பட்ட பெண் உடல் உறுப்புகள் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என்பதும் குடும்ப சண்டையில் கணவனே துண்டு துண்டாக வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்து குப்பைத் தொட்டியில் வீசியதை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து, காவல் துறையினர் விரைந்துசென்று கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவன் பாலகிருஷ்ணன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் பாலகிருஷ்ணன் திரைத்துறையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.