பிரபல நடிகை பாவனா படப்பிடிப்பை முடித்து விட்டு கொச்சியில் இருந்து திருச்சூருக்கு தன்னுடைய காரில் பிப்ரவரி 17-ம் தேதி சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வேனில் வந்த மர்ம கும்பல் பாவனாவை அவருடைய காரில் கடத்திச் சென்றது. காரில் வைத்து அந்த கும்பல் பாவனாவுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தது. இது மல்லுவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் பின்னர் அந்த கும்பலிடம் இருந்து தப்பி வந்த பாவனா இது குறித்து போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இந்த வழக்கில் தொடர்புடைய பல்சர் சுனில் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இச்சம்பவத்தில் பிரபல மலையாள நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதை திலீப் மறுத்தார்.
இதனிடையே கேரள மாநில டி.ஜி.பி.யிடம், திலீப் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், சிறையில் இருக்கும் சுனில் தன்னை இந்த வழக்கில் இருந்து தப்ப வைப்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டல் கடிதம் எழுதி இருப்பதாக கூறியிருந்தார்.
இதேபோல் திலீப்பின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான நாதிர்ஷாவும் போலீசில் கொடுத்த புகாரில், ‘சுனிலின் நண்பர் விஷ்ணு என்பவர் தன்னை தொடர்பு கொண்டார். பாவனா கடத்தல் வழக்கில் திலீப்பை சிக்க வைக்க பலரும் எங்களுக்கு பணம் கொடுக்க தயாராக உள்ளனர். எனவே இந்த வழக்கில் இருந்து அவரை காப்பாற்ற பணம் தர வேண்டும் என்று மிரட்டினார்’ என கூறியிருந்தார்.
இதே போல் திலீப்பின் மேலாளர் அப்புண்ணிக்கும் மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த திலீப், நாதிர்ஷா, அப்புண்ணி ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளிக்க கேரள போலீசார் சம்மன் அனுப்பினர்.
அதன்படி கொச்சி போலீஸ் கிளப்பில் நேற்று முன் தினம் மதியம் 12.30 மணிக்கு 3 பேரிடமும் கூடுதல் டி.ஜி.பி. சந்தியா தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் தனித்தனியாக விசாரணையைத் தொடங்கினர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை நள்ளிரவு 1.05 வரை நீடித்தது. அப்போது அவர்கள் கொடுத்த வாக்குமூலங்களை போலீசார் பதிவு செய்து கொண்டனர். சுமார் 13 மணி நேர விசாரணைக்கு பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.
போலீசார் அவர்களிடம் துருவித் துருவி நடத்திய விசாரணையில் இந்த வழக்கு குறித்து மேலும் பல உண்மைகள் வெளிவந்து இருக்கலாம் எனத் தெரிகிறது.