சிலர் காற்றாடி இல்லாமல், கொசுக்கடியிலும், வெறும் தரையில் கூட உறங்குவார்கள். அவர்களுக்கு கவலையே இல்லை என்று கூறுவோம்.
ஆனால் தூக்கம் வராமல் சிலர் தவிப்பார்கள். ஏசி, மெத்தை என்று எதில் உறங்கினாலும் சிலருக்கு தூக்கம் வருவது கடினமாக இருக்கும். அதற்காக அவர்கள் தூக்க மாத்திரைகள், மது போன்ற தவறாக வழிகளை நாடுவார்கள். இது உடலுக்கு மோசமான விளைவுகளை பின்னாளில் ஏற்படுத்தும்.
முக்கியமான ஒருவிஷயம், நாம் ஒவ்வொருவரும், ஆழ்ந்த உறக்கத்திற்கு அவசியமான சூழல்களை நமது படுக்கையறையில் உருவாக்கி வைக்க வேண்டும். அவற்றை பார்ப்போம்.
நல்ல புத்தகங்களை படிப்பது ஆழ்ந்த உறக்கத்திற்கு சிறந்த வழி என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். படுக்கையறையை உங்களது நண்பனாக ஆக்குவதற்கு இந்த பழக்கம் உதவும்.
சுடுதண்ணீரில் குளிப்பதோ, அல்லது உடற்பயிற்சியோ செய்தோ நீங்கள் படுக்கைக்கு செல்லும் இரண்டு மணி நேரத்திற்கு முன்பே செய்வது நல்லது.
இதேபோல் உறங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே இரவு சாப்பாட்டை முடித்துவிடுவது நல்லது.
இதேபோல் தூங்கும் முன் மூலிகை டீ சாப்பிடுவது ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
தற்போதைய வாழ்க்கை சூழலில் நேரத்திற்கு தூங்குவது என்பது கடினம் என்றாலும், தினசரி நீங்கள் தூங்கும் நேரம் ரெகுலராக இருந்தால் நல்லது.
6 மணி நேரத்திற்கு குறைவாக தூங்கினால் உடல் நலத்தை பாதிக்கும். நீங்கள் உங்கள் வேலையிலும் சரியாக ஈடுபட முடியாது. எனவே தூங்கும் நேரம் 7 முதல் 8 மணி நேரமாவது இருக்க வேண்டும்.
மனம் அமைதியாகஇருந்தால் தூக்கம் தானாக வரும் . எனவே மனதை இனிமையாக இருக்கும் வகையில் படுக்கை அறை இருக்க வேண்டும். உதாரணத்திற்கு தலையணையில் பிடித்த வாசனை திரவியங்கள் அடிப்பது, திரைச்சிலைகளை மனதிற்கு பிடித்த டிஸைனில் அமைப்பது, விளக்கு வெளிச்சங்கள் கண்களை உறுத்தாத வகையில் அமைப்பது, போன்றவை.
எல்லாவற்றுக்கும் மேலாக நாம் தூங்கும் போது ஸ்விட்ச் ஆப் செய்ய வேண்டியது லைட்டை மட்டுமல்ல, , எதிர்மறை எண்ணங்கள், கவலைகள், மனஅழுத்தம், எல்லாவற்றையும் சேர்த்து ஸ்விட்ச் ஆப் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தூக்கம் இயல்பாக வரும்.