சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றிய அமமுக அம்மா பேரவை செயலாளர் வி.வேட்டையன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பி.முத்துமாரி, கிளைச் செயலாளர் முருகன் ஆகியோர் இன்று திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வின்போது திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, மதுரை மாவட்ட திமுக செயலாளர் பி.மூர்த்தி, மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் எம்.எல்.ஏ மு.மணிமாறன் உடன் இருந்தனர்.
கடந்த மாதம் அமமுகவின் கரூர் மாவட்டச் செயலாளராக இருந்த செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார். இது டிடிவிக்கு மிகுந்த பின்னடைவாக பார்க்கப்பட்டது. இதனால் டிடிவி தினகரன், ஸ்டாலின் ஆகியோர் தொடர்ந்து ஒருவரையொருவர் விமர்சித்து வந்தனர்.
அதைத் தொடர்ந்து அமமுகவில் இருந்து பலர் அதிமுகவிலும், திமுகவிலும் சேர்ந்தனர். இதனால் தினகரனின் கூடாரம் காலியாகிவிட்டது என்று அதிமுக அமைச்சர்கள் பலரும் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் தங்களை திமுகவில் இணைத்து கொண்டுள்ள சம்பவம் டிடிவி தினகரனின் அமமுக மேல், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.