கோப்புப்படம்
2019 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே மாதம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் நடைபெறுகிறது. பத்து அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
வரும் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்கு அனைத்து அணிகளும் ஆயத்தம் ஆகி வருகின்றன. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், மூன்று உலகக் கோப்பையை கைப்பற்றிய ரிக்கி பாண்டிங் உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் துணைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது அந்த அணிக்கு கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சி செய்தியாக அமைந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி கடந்த ஆண்டு நடைபெற்ற தென்ஆப்பிரிக்க தொடருக்கு பின் பல்வேறு விமர்சனங்களையும், தோல்விகளையும் சந்தித்து வந்தது.
சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணி மண்ணைக் கவ்வியது. இதற்கு காரணம் அந்த அணியின் கேப்டன் ஸ்மித், அதிரடி ஆட்டக்காரர்கள் இல்லாததே என்று பலரும் கூறினர்.
அவர்களின் தடைக்காலம் விரைவில் முடிந்து அணிக்கு திரும்பவுள்ளது அணிக்கு பலமாக கருதப்பட்டது. தற்போது அந்த அணியின் துணைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்கை நியமித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.
ஆஸ்திரேலிய அணியின் பவுலிங் கோச் டேவிட் சகேர் விலகியதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாண்டிங் பேட்டிங் பயிற்சியை பார்த்துக்கொள்ள உள்ளதாகவும், தற்போதைய பேட்டிங் பயிற்சியாளர் கிரீம் ஹிக் ஆஷஸ் தொடரில் கவனம் செலுத்துவார் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாண்டிங்கின் வருகை ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்காக 1995 - 2012 வரை ஆடியுள்ள ரிக்கி பாண்டிங், அந்த அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அவர் இதுவரை 375 போட்டிகளில் விளையாடி 13 ஆயிரத்து 304 ரன்கள் எடுத்து சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார்.
இவர் ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கோச்சாக கடந்த 2014 முதல் 2016 இருந்துள்ளார். மேலும் கடந்த வருடம் டெல்லி அணியின் கோச்சாகவும் இவர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.