தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் எனப்படும் தலைக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என்கிற சட்டம் அமலில் இருக்கிறது. ஆனால், பொதுமக்களில் பலர் இத்திட்டத்தினை முறையாக பின்பற்றுவதில்லை.
இதனால், சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், இன்று முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுவதாகவும், மீறினால் தண்டனை விதிக்கப்படும் என்றும் மாநில டி.ஜி.பி. சுந்தரி நந்தா, போக்குவரத்து துறை செயலர் சரண்சிங், ஆணையர் சிவக்குமார், போக்குவரத்து மாநகர காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வா ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.
இதனையடுத்து, புதுவையில் ஹெல்மெட் அணிவது இன்று முதல் மீண்டும் கட்டாயமாக்கப்படுகிறது. இன்று முதல் தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள் மீது முதல்முறை 100 ரூபாய் அபராதமும், இரண்டாம் முறை 300 ரூபாய் அபராதமும், மூன்றாவது முறை சிக்கினால் 6 மாதத்திற்கு வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, ஹெல்மெட் கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள முதல் நாளான இன்றே, மாநகரின் பிரதான சாலையில் இறங்கி ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை கிரண்பேடி எச்சரித்தார். இந்த நிகழ்வு அப்பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.