மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை சுலைகா பானு தொடர்ந்து 40 மணிநேரம் பள்ளி மாணவ மாணவியருக்கு வகுப்பு எடுத்து உலக சாதனை படைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்த சாதனை முயற்சி மதுரை கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நேற்று (2018 டிசம்பர் 01) காலை 9 மணி அளவில் துவங்கியவர் தற்போது வரை மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து ஆசிரியை சுலைகா பானு கூறுகையில், 'நான் மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராஜன் வித்யாலயா நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன்.
தற்போது நான் மேற்கொண்ட இந்த முயற்சி பள்ளி மாணவ மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டும் கற்றலில் பல்வேறு புதுமையான முறைகளை ஆசிரியர்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலும் இந்த சாதனை முயற்சியை மேற்கொண்டுள்ளேன்
ஆசிரியர் தொழிலை நான் தெய்வமாக மதித்து வணங்குகிறேன். இந்த தொழிலில் மூலமாக ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எப்போதுமே இருந்துள்ளது அதன் காரணமாகத்தான் இந்த சாதனையை முயற்சியை மேற்கொள்ள நான் முடிவெடுத்தேன்
எனது பிள்ளைகளோடு செலவிட்ட நேரத்தை விட வகுப்பு மாணவர்களோடு எனது நேரங்கள் சென்றது தான் அதிகம் ஆகையால் கற்றல் குறித்த விஷயங்களில் மாணவர்கள் ஆழமான புரிதலோடு செயல்பட வேண்டும்
அதேநேரம் ஆசிரியர் தொழிலில் இன்று பெற்றோர்களுக்கு நம்பிக்கை குறைந்து கொண்டுள்ளது அதையும் மீட்டெடுக்க வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உண்டு அந்த அடிப்படையிலும் இந்த உலக சாதனை முயற்சியை மேற்கொண்டு வருகிறேன்
இந்த முயற்சிக்காக என்னுடன் பணியாற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் பெரிய அளவில் எனக்கு உதவி புரிந்துள்ளனர். அந்த அடிப்படையில் அவர்களுக்கு எனது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்
சாம்பியன் வோ்ல்ட் ரெக்கார்டு என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பில் இந்த சாதனை முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களான நட்சத்திரா மற்றும் விஸ்வநாத் ஆகியோர் இந்த உலக சாதனை முயற்சி மதிப்பீடு செய்து வருகின்றனர்.
தற்போது 26 மணி நேரங்களை கடந்து ஆசிரியை சுலைகா பானு 40 மணி நேரத்தையும் தாண்டி சாதனை படைக்கும் எண்ணத்தோடு தற்போது தனது முயற்சியை தொடர்ந்து வருகிறார்.