நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற நிலையில், டி-20 தொடரில் முதல் இரு போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்திருந்தது.
இந்நிலையில், மூன்றாவது டி20 போட்டி இன்று ஹாமில்டன் நகரில் உள்ள சடன்பார்க் மைதானத்தில் நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் செட்டர்வெய்ட் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீராங்கனைகளாக டெவின், சுசி பேட்ஸ் களமிறங்கி முதல் விக்கெட்டிற்கு 46 ரன்கள் சேர்த்தனர்.
பின்னர் வந்த ஹன்னா 12 ரன்னில் வெளியேற கேப்டன் செட்டர்வெய்ட்டுடன் டெவின் ஜோடி சேர இந்திய பந்துவேச்சை துவம்சம் செய்தனர். 3-வது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 71 ரன்களை குவித்தது. டெவின் 72 ரன்களும் செட்டர்வெய்ட் 31 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க நியூசி.யின் ரன்ரேட் கட்டுப்படுத்தப்பட்டது.
பின்னர் வந்த வீரர்கள் பெரிதாக சோபிக்காததால் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை குவித்தது.
162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, தொடக்க வீராங்கனைகளாக பிரியா புனியாவுடன் அதிரடி வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா களமிறங்கினார்.
பிரியா புனியா ஒரு ரன்னில் வெளியேற, ரோட்ரிக்ஸ் களமிறங்கினார். பின்னர் இந்திய அணி அதிரடியில் 5-வது கியருக்கு மாறியது. இந்த இணையிடம் நியூசி.யின் பந்துவீச்சாளர்களின் பந்து சிறிதும் எடுபடாமல் போனது. ரோட்ரிக்ஸ் 21 ரன்கள் எடுத்திருந்தபோது டெவின் பந்தில் அவட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அதன்பின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் 2 ரன்னிலும், மந்தனா 86 ரன்களிலும் வெளியேற ஆட்டம் பரபரப்பானது. பின்னர் மிதாலியுடன் தீப்தி களமிறங்கினார். இந்நிலையில் 8 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட ரசிகர்கள் மத்தியில் பதற்றம் பற்றிக் கொண்டது.
கடைசி ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி செல்ல ஆட்டம் பரபரப்பானது. பின்னர் முறையே 1,4,4,2,1 என்று செல்ல கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தை மிதாலி ராஜ் எதிர்கொள்ள காஸ்பெரேக் வீச, ஒரு ரன் மட்டுமே எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 159 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
ஆட்டநாயகி மற்றும் தொடர் நாயகியாக நியூசிலாந்து வீரங்கனை டெவின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.