அனுபவம் மிக்க மத்திய அமைச்சர் இப்படி கருத்துச் சொல்வது ஏற்புடையதல்ல - தொல்.திருமாவளவன்
மதுரை விமானநிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,
மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்காக போராடும்போது எதிர்க்கட்சிகள் ஆதரிப்பது, இணைந்து போராடுவது என்பது வழக்கம்.
அனுபவம் உள்ள மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மக்களை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன என்று கருத்துச் சொல்வது ஏற்புடையதல்ல.
கர்நாடக சிறையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு சிறையில் வசதிகள் செய்து தர லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு குறித்து கர்நாடக முதல்வர் சித்தாராமையா விசாரணைக்குழு அமைத்துள்ளார்.
அக்குழுவின் அறிக்கைக்குப் பின்னர்தான் உண்மை வெளிச்சத்திற்கு வரும். அதன் பின்னரே அப்பிரச்சனை குறித்து கருத்துக் கூறமுடியும்.
டிராஃபிக் ராமசாமி நீதிக்காகப் போராடக் கூடியவர். அவர் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி மிரட்டல் மூலம் போராட அவசியமில்லை.
தனியாகவோ, மக்களை திரட்டியோ போராடுவது என பலவழிகள் இருந்தபோதும், மக்களோடு இணைந்து அவர் போராட முன் வர வேண்டும்.
தமிழகத்தில் தலித் மீதான தாக்குதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் 60 பேர் கெல்லப்பட்டுள்ளனர். இதில் 40 பேர் தலித்கள். வட பழஞ்சி முத்தழகு, திருச்சி கதிரேசன், நேற்று ராஜாக்கூர் அழகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவற்றை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தலித்களைப் பாதுகாக்க வேண்டும்' என்றார்.