கோப்புப்படம்
சாகசம் என்ற ஒரு சொல்லுக்கு வயது ஒரு தடையாகிவிடக்கூடாது சாகசம் புரிய நினைக்கும் வயதானவர்களுக்கென்றே பிரத்யேகமான மிகவும் எளிமையான அதே சமயம் சுவாரஸ்யங்கள் நிறைந்த சாகசங்கள் பல உள்ளன.
ஆதித்யா லூம்பா,ராமன் நரூலா எனும் இருவர் இத்தகைய மூத்த குடிமக்களுக்கென்றே கீழ்கண்ட சுற்றுலாக்களை பரிந்துரைக்கின்றனர்.
ஜிம் கார்பட்டில் வனவிலங்குகள் சுற்றுலா: சாகசப் பிரியர்களுக்கென்று உலகில் தலைச்சிறந்த இடங்களுள் ஒன்று ஜிம் கார்பெட் தேசிய பூங்கா. காட்டுக்குள் செல்லும் இன்பச் சுற்றுலாவுடன் கார்பெட் அருவியிலிருந்து வரும் சில்லென்ற சாரல் துளிகளும் சேர்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கு சுகமானதொரு அனுபவத்தை தருகின்றன.
மேலும், வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள்,கோவில்கள் என உங்கள் நேரத்தை கழிக்க எண்ணற்ற இடங்கள் இங்கு அமைந்துள்ளன.
ராஃப்டிங் பயணம்: நதியில் ராப்டிங், மலையேற்றம் என பல சுவாரசியமான அம்சங்களைத் தன்னுள் கொண்டிருக்கிறது பியாஸ் நதியின் கரையோரத்தில் அமைந்திருக்கும் குல்லு எனும் சாகசப் பூங்கா. இங்கே வயது தடையின்றி அனைத்து வயதினரும் தங்கள் லைப் ஜாக்கெட்டுகளுடன் இறங்கி ராப்டிங்கில் ஒரு கை பார்த்து விடலாம்.
ஆற்றங்கரை முகாம்கள்: நட்ச்சத்திரங்களின் நயமான ஒளியில் ஹாயாக பொழுதைக் கழிப்பதற்கென்றே மணிப்பூர் மாநிலம் பாராக் நதிக்கரையில் அமைந்திருக்கிறது கூடாங்க் அருவி. பாறையிடுக்குகளிலிருந்து ஆர்பரித்துக் கொட்டும் அருவியின் ஒவ்வொருத் துளியையும் காணக் கண் கோடி வேண்டுமென்று கூறினால் அது மிகையாது.
ராட்சச பலூன் பயணம்: உலகின் உச்சியை தொட்டுவிட்டேன் என்று என்றாவதொரு நாள் எண்ணியிருக்கிறீர்களா, இல்லையெனில் இது போன்ற அனுபவங்களை உங்களுக்குத் தருவதற்கென்றே இந்தியாவில் அமைந்திருக்கின்றன பல இடங்கள். ராஜஸ்தானின் புஷ்கர், மகாராஷ்ட்ராவின் லோன்வாலா அருகிலுள்ள காம்சட் டம்டமா ஏரி உள்ளிட்டவை அவற்றுள் சில. இதில் பயணிக்கத் தேவையான ஒரே தகுதி நீங்கள் 4 அடி உயரத்திற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.