பயணம். செக்கு மாடு போல தினமும் ஒரே மாதிரியான வேலயைச் செய்து சோர்வு ஏற்பட்டு, சரி எங்கேயாவது போய்வரலாம் என்று தோன்றினாலும், கூட சேர்ந்து வர யாரும் தயாராக இல்லையே? தனியாக போவதா? சுற்றிப்பார்க்க எங்கே போவது? என பல கேள்விகள் எழும்.
உலகை தனியாக ரசிக்கலாமே!
இந்த உலகை தனியாக ரசிக்கலாமே. நீங்கள் மட்டும் தனியாக கிளம்பி அட்வென்ச்சர் டிராவல் பண்ணுங்க.
சில நேரத்தில் இந்த கூட்டத்திலிருந்து சற்று விலகி இந்த உலகை தன்னந்தனியாக சுற்றித்திரிந்து ரசித்து மகிழ்வது தனி அனுபவம். அது ஒரு சிலிர்பூட்டும் அனுபவம்.
கடிகாரத்திற்குள் மாட்டிக்கொண்டு ஓடும் வாழ்க்கையிலிருந்து தப்பித்து கொஞ்சம் உலகை சுற்றலாம் என்ற ஆசை தான், ஆனால் அதற்கு பணம் நிறைய செலவாகும் என்ன செய்ய? என நினைக்கலாம்.
அப்படி இல்லை. நாம் எங்கே போகிறோம் என்பதைப் பொறுத்துதான் செலவும் ஏற்படும். கேரளா போறேன், கோவா போறேன், இல்ல லண்டன் போறேன், பாரீஸ் போறேன் என்றால் தாராளமாக போகலாம் உங்களுக்கு அதற்கு ஏற்ற நேரமும் வசதியும் இருந்தால்.
இல்லை என்றால் இருக்கிறது ஒரு அருமையான வழி. நம் ஊரிலே நாம் பார்த்துவிட்டு கவனிக்காமல் கடந்து போன பல இடங்கள் இருக்கிறது. அருகேயுள்ள கிராமங்கள், அதனை சுற்றியுள்ள நீர்நிலைகள், காடுகள், வயல்வெளி, பள்ளம், மேடு என கேட்பாரற்று கிடக்கின்றன.
பிரபலமான சுற்றுலா தளமாக இருக்காது, ஆனால் சுற்றலாவுக்கு ஏற்ற இடமாக இருக்கும். யாருமில்லாத அந்த இடத்திற்குச் சென்று என்ன செய்ய? என்று கேட்கலாம்.
இலக்கை அடைவதைவிட பயணத்தை ரசிப்பது தான் முக்கியமானது.
ஜன்னல் ஓர இருக்கையில் யாரென்றே தெரியாதவர் அருகே அமர்ந்து கொண்டு, எங்கே போகிறோம் என தெரியாமல் வேடிக்கை பார்ப்பது தனி உணர்வு.அப்படி ஒரு பயணம் உங்கள் வாழ்க்கையில் இதற்கு முன் செய்ததுண்டா? இல்லை என்றால் கண்டிப்பாக செய்யுங்கள்.
பயணங்கள் நமக்கு வாழ்க்கையை கற்றுகொடுக்கும். பயணங்கள் பார்வையை விசாலமாக்கும். சோர்ந்து போன மனதிற்கு புத்துணர்வு அளிக்கும். புதிய சிந்தனைகளுக்கு வழிவகுக்கும்.
உண்மையில் ஒரு சாகசப் பயணம்!
சாகசம் என்றதும் மலையிலிருந்து குதிப்பது, கடலில் நீச்சலிடிப்பது என நினைக்க வேண்டாம். உங்கள் கையில் இருக்கும் செல்போனை நீங்கள் முதலில் மறக்க வேண்டும். இப்போது செல்போன் இல்லாது வாழ்க்கையை பலராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாது.
செல்போனை வீட்டில் வைத்துவிட்டு, கை கடிகாரத்தை வீட்டில் வைத்துவிட்டு, தேவைக்கு ஏற்ப கையில் கொஞ்சம் பணம் எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து கிளம்புங்கள்.
போகிற வழியெல்லாம் செல்பி எடுத்துவிட்டு, கண்முன்னே விரிந்து கிடக்கும் உலகை ரசிக்காமல் செல்லும் பயணத்தில் ஒன்றுமில்லை.
போட்டோ எடுக்காமல், செல்பி இல்லாமல், பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டா ஸ்டேடஸ் இல்லாமல் ஒரு பயணம்.
எங்கே போவது என தெரியவில்லையா? உங்கள் ஊரில் உள்ள பஸ் ஸ்டாடுக்கு சென்று, அங்கு நிற்கும் ஒரு பேருந்தில் ஏறி அமருங்கள். அது எங்கே போகிறது என தெரியவேண்டிய அவசியமில்லை. உள்ளே சென்று உட்காருங்கள்.
கடைசி ஸ்டாப்புக்கு டிக்கெட் எடுங்கள். கடைசி ஸ்டாப்பில் தான் இறங்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. தோன்றும் இடத்தில் இறங்குங்கள். காலம், நேரம், கடிகாரம் என எல்லாவற்றையும் மறந்துவிட்டு சுற்றித்திரியுங்கள்.
மனம் முழுவதும் வேறு சிந்தனையே இல்லாமல், உலகையே மறந்து சுற்றிவிட்டு சரி போகலாம் என்ற எண்ணம் வரும்போது வீடு திரும்புங்கள்.